சென்னை,
கல்பாக்கத்தில் அமைக்க உள்ள ஈனுலைத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கும ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் தெரிவித்திருப்பதாவது:-
கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட மாதிரி வேக ஈனுலை (Prototype Fast Breeder reactor (PFBR), ஏப்ரல் 6ஆம் தேதி முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை எட்டியதாக பிரதமர் மோடி சமூக ஊடகங்களின் வாயிலாக வெளியிட்டார். ஒன்றிய அணுசக்தித்துறை கல்பாக்கம் அணுவுலை வளாகத்தில் 500 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலையை 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டத்தொடங்கியது. 2004ஆம் ஆண்டு கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு இத்திட்டம் 2010ஆம் ஆண்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதன் தொழில்நுட்பமானது உலக நாடுகள் பலவும் பயன்படுத்தி கைகூடாத காரணத்தால் கைவிடப்பட்ட தொழில்நுட்பமாகும். இதன் காரணமாக இத்திட்டம் தொடர்ந்து தாமதமாகி வந்த நிலையில் இப்போது 2026 செப்டம்பருக்குள் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. கட்டுமானம் தாமதமானதால் இத்திட்டத்திற்கான பொருட்செலவு இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்தது.
ஈனுலை தொழில்நுட்பம் பாதுகாப்பற்றது, தேவையற்றது, அதிக பொருளாதாரச்சுமையை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதை கைவிட்டன. இவ்வகை உலைகளில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படும் திரவ சோடியம் கசிந்த காரணத்தால் ஜப்பானில் மாஞ்சூ ஈனுலையில் தீ விபத்து ஏற்பட்டு அவ்வுலை மூடப்பட்டது. பிரான்சில் செயல்பட்டு வந்த சூப்பர் பீனிக் ஈனுலையும் அதிக பொருளாதாராச்சுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை, பொதுமக்கள் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்டது.
அணுவுலைகளில் இருந்து உருவாகும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளான புளூட்டோனியத்தை ஈனுலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தி அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதுதான் இத்திட்டமாகும். இவ்வுலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகள் அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படலாம் என்கிற சந்தேகத்தையும் பல அணுசக்தித் துறை நிபுணர்கள் எழுப்பியுள்ளனர். தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்காக நிதி கேட்டால் ஒன்றிய அரசு தருவதில்லை. மதுரைக்கும் கோயம்புத்தூருக்கும் மெட்ரோ கேட்டு விண்ணப்பித்தால் அதையும் மறுக்கிறது. மெட்ரோ திட்டத்துக்கும் மஹாராஷ்டிரா பா.ஜ.க. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கும் சம்பந்தமே கிடையாது. ஆனால் மதுரையில் பா.ஜ.க. வேட்பாளர் ஜெயித்தால் மெட்ரோ திட்டம் வரும் என அவர் பேசுகிறார்.
ஏற்கெனவே கூடங்குளத்தில் 6 அணுவுலைகளும் மற்றும் அணுக்கழிவு மையங்களும் ஒன்றிய அரசு அமைத்திருக்கிறது. இப்போது ஆபத்துமிக்க ஈனுலைகளைச் செயல்படுத்தி தமிழக மக்களை கதிரியக்க ஆபாயத்தில் தள்ளுகிறது மோடி அரசு. தங்களைத் தொடர்ந்து புறந்தள்ளும் தமிழக மக்களை சோதனை எலிகளாக்கி ஈனுலையை செயல்படுத்த முயலும் ஒன்றிய பா.ஜ.க. அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.