சென்னை,
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார். ‘ஏவுகணை நாயகன்’ என்று அழைக்கப்படும் அப்துல் கலாமின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசால் "இளைஞர் மறுமலர்ச்சி நாளாக" அனுசரிக்கப்படுகிறது.
இந்நாளில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனும், இளைஞர்களின் எழுச்சிக்கு வித்திட்ட மகத்தான விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று!
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியதோடு, இளைஞர்களின் கனவுகளுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் உன்னத லட்சியத்தை விதைத்தவர்.
“கனவு காணுங்கள், அந்தக் கனவுகளை நனவாக்க உழையுங்கள்” என்ற அவரது சிந்தனைகள், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும். அவரது உயரிய சிந்தனைகளையும், தேசத்தின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பணிகளையும் நினைவுகூர்ந்து, அன்னாரது பிறந்த தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துவோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.