தமிழக செய்திகள்

அபுதாபி, ஷார்ஜா விமானங்கள் ரத்து: கோவையில் தங்க நகை, காய்கறி ஏற்றுமதி பாதிப்பு

கோவையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு பயணிகள் செல்ல முடியவில்லை.

கோவை,

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையே போர் நீடித்து வருவதால், வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கோவை விமான நிலையம் வழியாக இயக்கப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவையில் இருந்து அபுதாபி மற்றும் ஷார்ஜாவுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது போரின் காரணமாக இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கோவையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு பயணிகள் செல்ல முடியவில்லை.

வேறு நகரங்களின் விமானநிலையம் வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதுவும் விமானங்கள் புறப்படுமா, நிறுத்தப்படுமா என்ற சந்தேகத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கோவையில் இருந்து விமானம் மூலம் காய்கறிகள், பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இவை பாதிக்கப்பட்டுள்ளது. தங்க நகை ஏற்றுமதியும் முடங்கி கிடக்கிறது.

வரும் நாட்களில் நிலைமை சீரடையும்போது கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கான விமான போக்குவரத்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமான நாட்களைவிட விமானத்தில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால் விமான நிலையத்தில் குறைந்த எண்ணிக்கையிலான கூட்டமே காணப்படுகிறது.