சென்னை,
சென்னை சென்டிரல் - அரக்கோணம் இடையே ஏ.சி. மின்சார ரெயில் சேவை நாளை மறுநாள் (அக்டோபர் 23) தொடங்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை சென்டிரல் - அரக்கோணம் இடையே முதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை அக்டோபர் 23-ந் தேதி முதல் டிசம்பர் 24-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது. சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ள இந்த ஏ.சி. மின்சார ரெயில் சேவை வாரத்தில் 5 நாட்கள் (திங்கள் முதல் வெள்ளி வரை) வழங்கப்பட இருக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சேவை கிடையாது.
சென்னை சென்டிரல் - ஆவடி - அரக்கோணம் வழித்தடத்தில் 3 ஜோடி ஏ.சி. மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது, சென்னை சென்டிரல் - ஆவடி, சென்னை சென்டிரல் - அரக்கோணம், ஆவடி - அரக்கோணம் வழித்தடத்தில் தலா ஒரு ஜோடி ஏ.சி. மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. 12 பெட்டிகளைக் கொண்ட இந்த ஏ.சி. மின்சார ரெயில் சுமார் 5 ஆயிரம் பயணிகள் செல்ல முடியும். மெட்ரோ ரெயிலில் இருப்பது போன்ற வசதிகள் இந்த ரெயிலிலும் செய்யப்பட்டுள்ளன. அதாவது, ஏ.சி. பெட்டிகள், தானியங்கி கதவுகள், துருப்பிடிக்காத இருக்கைகள், பெரிய கண்ணாடி ஜன்னல்கள், அழகிய விளக்குகள், ஜி.பி.எஸ். அடிப்படையிலான எல்.இ.டி. திரைகள், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், அவசர காலங்களில் பயணிகளுடன் பேசும் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே கடந்த ஆண்டு (2025) ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆவடியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் ஏ.சி. மின்சார ரெயில் காலை 7.45 மணிக்கு அரக்கோணத்தை சென்றடைகிறது. இதேபோல், சென்னை சென்டிரலில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் ஏ.சி. மின்சார ரெயில் காலை 10.25 மணிக்கு ஆவடியை சென்றடைகிறது. மேலும், சென்னை சென்டிரலில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும் ஏ.சி. மின்சார ரெயில் இரவு 7.55 மணிக்கு அரக்கோணத்தை சென்றடைகிறது.
அரக்கோணத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் ஏ.சி. மின்சார ரெயில் காலை 9.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது. இதேபோல், ஆவடியில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்படும் ஏ.சி. மின்சார ரெயில் மாலை 6.10 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது. மேலும், அரக்கோணத்தில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும் ஏ.சி. மின்சார ரெயில் இரவு 9.10 மணிக்கு ஆவடியை சென்றடைகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.