தர்மபுரி,
தொப்பூர் கணவாயில் கார் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சிக்கி கோவில்பட்டியை சேர்ந்த தம்பதி பலியாகினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிவந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்க மாரியப்பன் (வயது59). இவரது மனைவி லதா (54). இவர்கள் பெங்களூருவில் குடியேறி முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தனர்.
சொந்த ஊரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்க தங்க மாரியப்பன், தனது மனைவி லதாவுடன் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து கோவில்பட்டிக்கு காரில் புறப்பட்டார். இந்த காரை லதாவின் தம்பி செந்தில்குமார் (47) ஓட்டி வந்தார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை கார் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது பின்னால் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு நைலான் கயிறு பாரம் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் 2 லாரிகள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் கார், 2 லாரிகளுக்கு இடையே சிக்கி நொறுங்கியது.
இந்த விபத்தில் லதா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தங்க மாரியப்பன், செந்தில்குமார் ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்க மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். செந்தில்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் டிரைவரான தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பட்டியை சேர்ந்த சசிகுமார் (52) என்பவரை கைது செய்தனர்.