தமிழக செய்திகள்

பைக் மீது லாரி மோதி விபத்து: தந்தை கண்முன்னே மகள் பலி

கன்னியாகுமரியைச் சேர்ந்த ராணுவ வீரர், அவரது மகளுடன் பைக்கில் தக்கலை காவல் நிலையம் முன்பாக சென்றபோது அங்கே வந்த கனிம வளங்கள் ஏற்றிய லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பைக்கின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் களியல், சிற்றாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ். ராணுவ வீரரான இவர், நேற்று இரவு தனது மகள் ஹாட்லின் அபினாவுடன் இருசக்கர வாகனத்தில் தக்கலை வழியாக சென்று கொண்டிருந்தார். தக்கலை காவல் நிலையம் முன்பாக அவர்கள் சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த கனிம வளங்கள் ஏற்றிய கனரக லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பைக்கின் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் லாரியின் சக்கரம் ஏறியதில், தலையில் பலத்த காயமடைந்த ஹாட்லின் அபினா, தனது தந்தை கண்முன்னேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். கிறிஸ்துராஜ் காயங்களுடன் உயிர் தப்பினார். நாட்டைக் காக்கும் பணியில் இருக்கும் ஒரு ராணுவ வீரரின் மகள், லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

விபத்து நடந்த உடனேயே ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள், விபத்தை ஏற்படுத்திய லாரியை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். "கட்டுப்பாடின்றி அதிவேகமாக இயக்கப்படும் கனிமவள லாரிகளால் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகின்றன" எனக் கூறி போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தினார். விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கனிமவள லாரிகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த உரிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

காவல் நிலையம் முன்பே இந்த துயர சம்பவம் நடந்ததும், அதைத் தொடர்ந்து நடந்த சாலை மறியலும் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலியான ஹாட்லின் அபினாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.