தூத்துக்குடி,
தூத்துக்குடி கதிர்வேல் நகர் வேலவன் நகரைச் சேர்ந்த பெருமாள் (41), கூலித் தொழிலாளி. இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
நேற்று இரவு வேலை முடித்து ஹீரோ ஹோண்டா பைக்கில் பாளையங்கோட்டை மெயின் ரோடு வழியாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, 3-வது மைல் மேம்பால இறக்கத்தில், தனக்கு முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, எதிர்திசையில் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார், பெருமாளின் பைக்கின் மீது நேருக்கு நேர் மோதி நிறுத்தாமல் தப்பிச் சென்றது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பெருமாளை அப்பகுதி மக்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கார் மற்றும் அதன் ஓட்டுநரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.