தமிழக செய்திகள்

செங்கல்பட்டு அருகே அரசு பஸ்-வேன் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

இந்த கோர விபத்தில் வேன் அப்பளம் போல நொறுங்கியது.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓஎம்ஆர் சாலையில் இன்று காலை தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேனும், அரசுப் மாநகர பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேனின் ஓட்டுநர் மற்றும் ஒரு பெண் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சாலையில் வேன் சென்றுக்கொண்டிருந்தபோது மாடு குறுக்கே வந்ததால் விபத்தை தவிர்க்க ஓட்டுநர் வேனை திருப்பி உள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் எதிர்திசையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தநேரம் அதேதிசையில் வந்த மாநகர பேருந்து வேனின் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் அப்பளம் போல நொறுங்கியது; பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SCROLL FOR NEXT