தமிழக செய்திகள்

பைக் மீது லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!

மாதவரத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு மூவரும் பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

சென்னை,

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (42) கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன் இன்பசெல்வன் (8), அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று, கார்த்திகேயன் தனது மனைவி மற்றும் மகனுடன் மணலி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று, பின்னர் மூவரும் பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மாதவரம் ஆந்திர பேருந்து நிலையம் அருகே சென்றபோது, பேருந்து நிலையத்திலிருந்து ஒரு ஆந்திர பேருந்து வெளியே வந்தது.

இதனை கவனித்த பின்னால் வந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பேருந்தின் பின்புறத்தில் மோதியது. இதில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளும் விபத்தில் சிக்கியது.

மோட்டார் சைக்கிளில் சென்ற கார்த்திகேயன், அவரது மனைவி மற்றும் மகன் மூவரும் கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புழல் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து, மூவரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அன்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.