காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி வந்த பஸ், முன்னால் சென்ற கனரக லாரி மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெண்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் மொபைல் போன்களுக்கு சார்ஜர் தயாரிக்கும் பிரபல தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு, ஆரணி பகுதியில் இருந்து இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு சுமார் 1:00 மணியளவில் தொழிற்சாலை பஸ் ஒன்று புறப்பட்டது.
பஸ் சந்தவேலூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த கனரக லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது.
இதனால் பஸ்சின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. இதனால் பஸ்சில் இருந்த தொழிலாளர்கள் அலறித்துடித்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்களும், தகவலறிந்து விரைந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீசாரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பெண்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். படுகாயமடைந்த ஆரணியைச் சேர்ந்த ரம்யா (வயது 21), முப்பதுவெட்டி பகுதியைச் சேர்ந்த சித்ரா (வயது 35), நெமிலியைச் சேர்ந்த கார்த்திகா (வயது 23) ஆகிய 3 தொழிலாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரி ஓட்டுநர் மற்றும் லேசான காயமடைந்த 7 பேர் முதலுதவி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கமே இந்த விபத்திற்குக் முதன்மைக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் ஓட்டுநர் தூங்கியதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து லாரியில் மோதியது. இச்சம்பவம் குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.