தமிழக செய்திகள்

தூத்துக்குடி அருகே பைக் மோதி விபத்து: சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சவலாபேரி புளியம்பட்டியைச் சேர்ந்த குமாரவேல் (48), சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர் நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் தெய்வச்செயல்புரம் சந்திப்பு அருகே சாலையை கடக்க முயன்றபோது, அவர் மீது பைக் எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த குமாரவேலை அப்பகுதி மக்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, பைக்கை ஓட்டி வந்த மேலக்கூட்டுடன்காடு மேற்குத் தெருவைச் சேர்ந்த வெனில்குமார் (21) மீது புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.