விபத்து 
தமிழக செய்திகள்

திண்டிவனம் அருகே தனியார் பள்ளி வேன் மீது கார் மோதி விபத்து: 15 குழந்தைகள் காயம்

விபத்தில் சிக்கி காயமடைந்த குழந்தைகள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

விழுப்புரம்,

திண்டிவனம் அருகே கார் மீது தனியார் பள்ளி வேன் மோதிக் கவிழ்ந்து 15 குழந்தைகள் காயமடைந்தனர்.

பள்ளி வேன் கவிழ்ந்தது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சாரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் பள்ளிக்கு சொந்தமான வேன், வழக்கம்போல் இன்று காலை மாணவர்களை வீடுகளில் இருந்து ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது .

அப்போது சாரம் பகுதி அருகே சென்றபோது, வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கார் மீது மோதி சாலையோரப் பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

குழந்தைகள் மீட்பு

இதனால் வேனின் உள்ளே இருந்த குழந்தைகள் பயத்தில் அய்யோ அம்மா என்று அலறி சத்தமிட்டனர். குழுந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் வேனின் கண்ணாடிகளை உடைத்து, உள்ளே சிக்கியிருந்த 15 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதனைத்தொடர்ந்து இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த குழந்தைகள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் அனைவரும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த உள்ளூர் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இந்த விபத்து ஏற்படக் காரணம் ஓட்டுநரின் அலட்சியமா? அல்லது வாகனத்தில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதா? என்ற பல் கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.