கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சபரிமலையில் தமிழக பக்தர்களுக்கு தங்கும் வசதி: அரசுக்கு ஐயப்ப சேவா சங்கம் கோரிக்கை

தமிழக பக்தர்களுக்கு தங்கும் வசதி செய்து கொடுக்க தமிழக அரசு, கேரளா அரசுடன் பேசி, அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பாக, தமிழக அரசுக்கு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஆண்டுதோறும் பெருமளவில் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தமிழக அரசு சார்பாக தேவையான உதவிகள் கிடைப்பதில்லை என்ற குறை பக்தர்கள் மனதில் உள்ளது. எனவே, தமிழக அரசு பக்தர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் மூலம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என அகில பாரத ஐயப்ப சேவா சங்க தமிழ் மாநில அமைப்பு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் பார்வைக்கு சில பரிந்துரைகளை வைக்கிறது.

அகில பாரத ஐயப்ப சங்கம் கடந்த 80 ஆண்டுகளாக சபரிமலை சன்னிதானம், பம்பா, கரிமலை, பெரியானைவட்டம் போன்ற இடங்களில் அன்னதானம் மூலிகை குடிநீர் வழங்குல் போன்ற சேவைகளை செய்து வருகிறது. மேலும், பம்பை முதல் சன்னிதானம் வரை சுகவீனமடைந்த பக்தர்களை உடனடி சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஸ்டெச்சர் சர்வீஸ் மூலம் எடுத்து செல்கின்றனர்.

மேலும், மண்டல மகர விளக்கு காலங்களில் தமிழ் மாநில அமைப்பின் மூலமாக ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அனைத்து மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் முகாம் அமைத்து அன்னதானம், தங்க இடம், முதல் உதவிகள் சேவை மனப்பான்மையுடன் செய்யப்படுகின்றன. இந்த முகாம்கள் தமிழக அரசின் ஆதரவுடன் செயல்படும்போது மேலும் பல பக்தர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

கடந்த 2 ஆண்டுகளாக கேரள அரசின் சில தடைகளால் நிலக்கல், பம்பா, சன்னிதானம் பகுதிகளில் சேவை செய்ய இயலவில்லை. சபரிமலையில் தென் மாநில ஐயப்ப பக்தர்கள் தமிழக உணவு கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் இருந்து வரும் பக்தர்களுக்கு தனியே தங்கும் வசதியும், அன்னதான வசதியும் செய்து கொடுக்க தமிழக அரசு கேரளா அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி அனுமதி பெற்றுத்தர வேண்டும்.

அவ்வாறு அனுமதி பெற்றுத்தரும் பட்சத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சபரிமலை சீசன் முழுவதும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கடந்த ஆண்டுகளைப் போலவே சங்கத்தின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மூலம் சேவை செய்ய தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.