சென்னை,
ஓய்வுபெற்ற வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் ரெங்கராஜ். ஐ.ஆர்.எஸ். அதிகாரியான இவர் மற்றும் இவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் கொடுக்கப்பட்டது.அதன்படி, சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
ஆரம்ப கட்ட விசாரணையில், பணியில் இருந்த காலகட்டத்தில் ரெங்கராஜ் மற்றும் அவரது மனைவி தங்களது வருமானத்துக்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துகளை குவித்திருப்பதாக கண்டறியப்பட்டது. அவர்களது வருமானம், செலவினங்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தபோது, சுமார் 34.53 சதவீதம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் இருப்பதாக சி.பி.ஐ. கணக்கிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், ரெங்கராஜ் மற்றும் உமா மகேஸ்வரி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. அவர்களுடன் தொடர்புடைய வங்கி கணக்குகள், நிலம், வீடுகள் மற்றும் பிற முதலீடுகள் குறித்த விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த வழக்கின் ஒரு பகுதியாக, சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தகவல் சேகரித்து வருகின்றனர்.