தமிழக செய்திகள்

ஆம்னி பஸ்களுக்கு அதிரடி செக்! தமிழகம் முழுவதும் 30 சிறப்பு குழுக்கள் களமிறக்கம்

ஒவ்வொரு குழுவிலும் வட்டார போக்குவரத்து அதிகாரி உள்பட 3 பேர் இடம்பெறுவார்கள்.

சென்னை,

தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட விதிமீறல்களை தடுக்க தமிழக போக்குவரத்து ஆணையரகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

வருகிற அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 19-ந்தேதி ஆயுத பூஜை மற்றும் நவம்பர் 8-ந்தேதி தீபாவளி பண்டிகை என அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் வர உள்ளன. இதையொட்டி ஆம்னி பஸ்களின் இயக்கம் அதிகரிக்கும் என்பதால், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, வரி நிலுவை வைத்திருப்பது, அதிக சுமைகளை ஏற்றிச் செல்வது, உரிய பர்மிட் இல்லாமல் பஸ்களை இயக்குவது போன்ற விதிமீறல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

சிறப்பு குழுக்கள்

இதனை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வட்டார போக்குவரத்து அதிகாரி உள்பட 3 பேர் இடம்பெறுவார்கள்.

இந்த குழுவினர் நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய பஸ் நிலையங்களில் திடீர் சோதனை நடத்தி ஆம்னி பஸ்களை கண்காணிப்பார்கள். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிப்பதுடன், தேவையான இடங்களில் பர்மிட் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT