தமிழக செய்திகள்

செவிலியர் மாணவி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக: சீமான்

தவறான மருத்துவ சிகிச்சையால் செவிலியர் மாணவி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியளிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

”புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமாநல்லூரைச் சேர்ந்த விவசாயிகளான சேட்டு – கலைச்செல்வி இணையரின் அன்புமகள் சீதாலட்சுமி அரசு மருத்துவமனையின் தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக உயிரிழந்த துயரநிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. செவிலியர் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்துவந்த அன்புமகளை இழந்து வாடும் பெற்றோருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.

அன்புமகள் சீதாலட்சுமி மூக்கில் வளர்ந்த சதையை அகற்றுவதற்காக, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சைக்காக அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து அளித்து மாணவி உயிரிழக்க காரணமாகியுள்ள மருத்துவர்களின் அலட்சிய செயல்பாடு வன்மையாக கண்டிக்கதக்கதாகும்.

உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் இலாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்காலச் சூழலில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் பெரும் தொண்டுள்ளத்தோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது இன்றியமையாததாகும்.

ஆனால், நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமாகும்.

தமிழ்நாடு அரசும், அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்ய, தொடர்ச்சியாகத் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும். அதனை முறையாகச் செய்யத் தவறுவதாலேயே தற்போது அநியாயமாக ஓர் உயிர் பறிபோயுள்ளது. கடந்த ஆட்சிகாலங்களில் நடைபெற்ற அதே அலட்சிய செயல்பாடு தற்போதைய ஆட்சியிலும் தொடர்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவமும், அரசுப்பள்ளிகளில் தரமற்ற கல்வியும் தொடர்வதை தவெக அரசு வேடிக்கை பார்ப்பது, மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் பெருந்துரோகமாகும்.

ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அன்புமகள் சீதாலட்சுமி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.