தமிழக செய்திகள்

சைபர் மோசடியில் இழந்த பணத்தை மீட்க நடவடிக்கை: வங்கி அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை

இணையவழி குற்றங்களை பொறுத்தவரையில், விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் மிக முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும்.

சென்னை,

தமிழ்நாடு ‘சைபர் கிரைம்' போலீசார் சார்பில் 'ஆன்லைன்' பண மோச டியை தடுப்பது குறித்து வங்கி அதிகாரிகளுடன் மாநில அளவிலான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டி.ஜி.பி. அலுவலகத்தில் நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் தலைமை தாங்கினார்.

ஆலோசனை கூட்டம்

கூட்டத்தில் அவர் பேசுகையில், 'இணையவழி குற்றங்களை பொறுத்தவரையில், விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் மிக முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும். சைபர் மோசடி நடந்தால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டும், www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரி மூலமும் உடனடியாக புகார் தெரிவிக்க ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடமும் வங்கிகள் அறிவுறுத்த வேண்டும். இது பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை வங்கி பாஸ்புக் உள்ளிட்டவற்றில் அச்சிட வேண்டும்' என்றார்.

கமிஷன் தொகைக்காக மோசடி நபர்களுக்கு உடந்தையாக இருக்கும் மியூல் வங்கிக் கணக்குகள் அதிகரித்து வருவது. ஏ.பி.ஐ. சாப்ட்வேர் மூலம் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை முடக்குவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த தொகையை மீட்டு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் 'சைபர் கிரைம்' கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மொடக் உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT