சென்னை,
கோபாலபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 11 வயது மாணவி படித்து வந்தார். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அந்த மாணவி வகுப்பரையில் தனது சக தோழிகளுடன் இருந்தார். மதிய வகுப்பு எடுக்க வந்த ஆசிரியர் அந்த 11 வயது மாணவிக்கு மாதவிடாய் ஏற்பட்டதன் காரணமாகவே, துர்நாற்றம் வீசுவதாக கூறி அந்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே நிற்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி முடியும் வரை சுமார் 4 மணி நேரம் அந்த சிறுமி வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, மாதவிடாயுடன் பள்ளி முடியும் வரை வெளியே நின்றுவிட்டு, வீட்டுக்கு சென்ற மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுததாக தகவல் தெரியவருகிறது.
இந்த நிலையில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் இது தொடர்பாக கூறியதாவது:-
அரசு பள்ளியாக இருந்தாலும் சரி, தனியார் பள்ளியாக இருந்தாலும் சரி, மாணவிகளை மாதவிடாய் தொடர்பான எந்தவொரு மன உளைச்சலுக்கோ அல்லது பாகுபாட்டிற்கோ உள்ளாக்க கூடாது" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மாணவியை மாதவிடாய் காரணமாக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த சம்பவம் உண்மையில் நடந்திருந்தால், அது மிகப்பெரிய தவறு. இது தொடர்பாக விசாரணை அறிக்கையின் அடிப்படையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான துறை ரீதியான மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலை தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.