ஈரோடு,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் ஆர்.சரத்குமார் ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை கவர்னர் நிராகரித்து இருக்கக்கூடாது. அதை சட்டமாக்க அவர் உறுதுணையாக இருந்திருக்க வேண்டும்.
ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில்...
ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடித்திருந்தேன். நான் மட்டும் அதில் நடிக்கவில்லை. பலரும் நடித்து உள்ளனர். அப்போது நான் சட்டத்திற்கு புறம்பாக செயல்படவில்லை.
சூதாட்டத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை சட்டமாக்க வேண்டும் என்று இப்போது நான் உறுதியாக கூறுகிறேன்.
டாஸ்மாக் வருமானத்தை வைத்து தான் அரசாங்கம் நடக்கிறதா? என்றால் இல்லை. மணல் மற்றும் கிரானைட் நிறுவனங்களை அரசு ஏற்று நடத்தினாலே அதிகமான வருமானம் கிடைக்கும். அதை ஏன் தனியாரிடம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.
முதலில் டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணிக்கு திறந்து 10 மணிக்கு மூட வேண்டும். இப்படி செய்தால் படிப்படியாக மதுக்கடைகளை மூட இது உந்துதலாக இருக்கும்.
வடமாநிலத்தவர்
ஆட்சியாளர்கள் ஆட்சியை விட்டு செல்லும்போது அவர் கொண்டு வந்த திட்டங்கள் நல்ல திட்டமாக இருந்தால் அதை வரும் ஆட்சியாளர்கள் தொடர வேண்டும். மக்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.
வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் கூறினேன். அப்போது பலரும் என்னிடம் ஏன் இதுபோன்று கூறுகிறீர்கள் என்று தெரிவித்தனர்.
எதற்காக நான் சொன்னேன் என்றால் வடமாநிலத்தவர்கள் இங்கு தவறு செய்து விட்டு சென்றுவிட்டால் அவர்களை பிடிக்க முடியாது. அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கூட பதிவு செய்து கொள்வது நல்லது.
இவ்வாறு சரத்குமார் கூறினார்.