தமிழக செய்திகள்

சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட இருந்த மரங்களை 210 கி.மீ. பயணிக்க வைத்து மீண்டும் உயிர் கொடுத்த சமூக ஆர்வலர்

மரங்களை வெட்டி அழிப்பதற்கு பதிலாக அவற்றை வேரோடு பிடுங்கி வேறு இடங்களில் மறுநடவு செய்ய வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடலூர்,

சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட இருந்த 7 மரங்களை ராணிப்பேட்டையில் இருந்து சிதம்பரத்துக்கு 210 கி.மீ. பயணிக்க வைத்து சமூக ஆர்வலர் மீண்டும் உயிர் கொடுத்துள்ளார்.

வெட்டப்படும் மரங்கள்

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்திற்காக 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் கூட ஒரே நாளில் வெட்டி சாய்க்கப்படுகிறது. விதிகளின்படி வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஈடாக 10 புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் மரங்களை வெட்டுவதில் காட்டும் ஆர்வத்தை புதிய கன்றுகளை நடுவதில் காட்டுவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசுக்கு கோரிக்கை

இவ்வாறு சாலை விரிவாக்க பணிக்காக பல ஆண்டுகள் பழமையான மரங்களை முற்றிலும் வெட்டி அழிப்பதற்கு பதிலாக நவீன எந்திரங்களை பயன்படுத்தி அவற்றை வேரோடு பிடுங்கி வேறு இடங்களில் மறுநடவு செய்ய வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு மாற்றாக மரங்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று நடும் வகையில் தமிழக அரசு திட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

7 மரங்களுக்கு உயிர் கொடுப்பு

இந்த நிலையில் ராணிப்பேட்டை சிப்காட்டில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்பட்டன. இதுபற்றி அறிந்த கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வீரசோழகன் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தரணி திருவேங்கடம் என்பவர் நேரில் சென்று ஒரு ஆலமரம், 4 அரச மரங்கள், 2 ஈச்ச மரங்களை வெட்ட வேண்டாம். நவீன எந்திரம் மூலம் அதை பிடுங்கி தனது சொந்த ஊருக்கு சென்று மீண்டும் நட்டு பராமரிக்கிறேன் என்று நெடுஞ்சாலைத்துறையினரிடம் அனுமதி பெற்றார்.

இதையடுத்து அந்த மரங்கள் பாதுகாப்பாக வேரோடு பிடுங்கி 2 லாரிகள் மூலம் 210 கிலோ மீட்டர் தூரமுள்ள வீரசோழகன் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு அவரது விவசாய நிலத்தில் நடப்பட்டன. சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட 7 மரங்களை 210 கிலோ மீட்டர் பயணிக்க வைத்து மீண்டும் உயிர் கொடுத்த சமூக ஆர்வலரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT