தமிழக செய்திகள்

அதிமுகவில் இருந்து நடிகை கவுதமி விலகல்

அ.தி.மு.க.வில் இருந்து பெரும்பாலானோர் விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர்.

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 75 ஆண்டு கால திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளி அரசியல் களத்தின் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது.

த.வெ.க.வின் எதிர்பாராத வளர்ச்சியினால் பாரம்பரியம்மிக்க தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் ஆட்டம் கண்டுள்ளன என்றால் அது மிகையல்ல. இதனால், அ.தி.மு.க.வில் இருந்து பெரும்பாலானோர் விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றும் பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் தங்களை த.வெ.க.வில் இணைத்துக்கொண்டனர்.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

இன்று முதல் நான் வகித்து வரும் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும் தற்போது உள்ள அரசியல் சூழல் கருத்தில் கொண்டு, நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

கழகத்தில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர் பெருமக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பிற அணி மாநில செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள்,பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் நகரக் கழக செயலாளர்களையும் மனதார வணங்கி நன்றி கூறி என்னை கழகத்திலிருந்து விடுவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.