சென்னை,
அடையாறு மண்டலத்தில் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் ஆர். குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ஆர். குமார், அடையாறு மண்டலம், வார்டு-179க்குட்பட்ட எலியட்ஸ் கடற்கரை சாலையில் உள்ள மார்க்கெட் பகுதி, பெசன்ட் நகரில் 7-வது அவென்யூ மற்றும் திடீர் நகர் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து, கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், வார்டு-179க்குட்பட்ட ராதாகிருஷ்ணன் சாலை, கலாசேத்ரா சாலை மற்றும் வார்டு-180க்குட்பட்ட திருவான்மியூர் மாளவியா அவென்யூ ஆகியவற்றில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு பருவமழைக்கு முன்னதாக முடித்திடவும், திருவள்ளுவர் சாலையில் உள்ள நீரேற்று நிலையத்தினை பார்வையிட்டு, முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, சோழபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தினைப் பார்வையிட்டு, வழங்கப்படும் உணவின் தரம் குறித்து உணவருந்தி ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து, வார்டு-180க்குட்பட்ட திருவான்மியூர், மருதீஸ்வரர் நகரில் உள்ள நியாயவிலைக் கடையினைப் பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், திருவான்மியூரில் மருதீஸ்வரர் நகர், லட்சுமிபுரம், பாரதிதாசன் தெருவில் கழிவுநீர் பிரச்சினை மற்றும் பட்டா தொடர்பான கோரிக்கைகளுக்காக பொதுமக்களைச் சந்தித்து கலந்துரையாடி, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், மண்டல அலுவலர் என்.தட்சிணாமூர்த்தி, வேளச்சேரி தாலுகா தாசில்தாரர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.