போடி,
போடி-சென்னை இடையே அதிவிரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் இந்த ரெயில் இரு மார்க்கத்திலும் இயக்கப்படுகிறது. போடியில் இருந்து இரவு 8.55 மணிக்கு புறப்படும் ரெயில், மதுரை, சேலம், காட்பாடி வழியாக மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 10 மணிக்கு போடியை வந்தடைகிறது. தற்போது இந்த ரெயிலில் 4 சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் உள்ள நிலையில் மேலும் 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதனால் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கிறது. அதேநேரத்தில் முதல் மற்றும் 2-ம் தர ஏ.சி. படுக்கை வசதி பெட்டிகள் தலா ஒன்று குறைக்கப்பட உள்ளன. புதிதாக இணைக்கப்படும் ரெயில் பெட்டிகள் சென்னை-போடி மார்க்கத்தில் நாளை மறுநாளும், போடி-சென்னை மார்க்கத்தில் 24-ந்தேதியும் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.