தமிழக செய்திகள்

வேட்புமனுக்கள் ஏற்பு, நிறுத்திவைப்பு.. பரிசீலனையின் போது பரபரப்பு

வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க.வின் ஆதவ் அர்ஜுனா மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

சென்னை,

234 தொகுதிகளுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்குமுன்பாக வேட்பாளரை இறுதி செய்யும் நடவடிக்கையாக வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது.

முதல்நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்), த.வெ.க. தலைவர் விஜய் (பெரம்பூர்), நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (காரைக்குடி) ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதேபோல் மற்ற வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர். இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் 7,600-க்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் வேட்புமனுவுக்கு கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு மீதான பரிசீலனை தொடங்கியது. வரும் 9ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியநிலையில், அதில் தவெக தலைவர் விஜய் (பெரம்பூர், திருச்சி கிழக்கு), முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்அமைச்சர் உதயநிதி, விருதுநகர் தொகுதி விஜயபிரபாகரன், இதேபோல செந்தில் பாலாஜி, தமிழிசை சவுந்திரராஜன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.சி. சம்பத், கே.பி.அன்பழகன், வானதி சீனிவாசன், செல்வப்பெருந்தகை, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர்பாபு, கே.என்.நேரு, ராஜகண்ணப்பன் மற்றும் சீமான், பிரேமலதா விஜயகாந்த், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், புஸ்ஸி ஆனந்த், தவெக பொருளாளர் வெங்கட்ரமணன், திலகபாமா, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

மதுரை மேலூர் தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகளின் எதிர்ப்பு மீறி காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் மனு ஏற்கப்பட்டுள்ளது.

இதனிடையே விஜய்யின் மனுவுக்கு பாமக உள்ளிட்ட வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விஜய் இரண்டாவது முறையாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்த போது சொத்து வரி கட்டவில்லை என்பதை குறிப்பிடவில்லை என்று கூறி வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்னர் பரிசீலனைக்குப்பிறகு விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

இந்த சூழலில் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. அவரது மனுவை ஏற்கக் கூடாது என சுயேச்சை வேட்பாளர்கள் தேவராஜன், முரளி வினோத் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது பிரமாணபத்திரத்தில் ஆதவ் மனைவியின் பெயரில் உள்ள 37 நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடவில்லை என்றும், வருமான வரிக் கணக்கில் காட்டாமல் ஆதவ்விடம் ரூ 1 கோடி இருப்பதாகவும், ஆதவ் அர்ஜுனாவின் வைப்பு நிதியில் உள்ள ரூ.2 கோடிக்கு ரூ.84 லட்சம் வரை வட்டி வருவதை, அவர் வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என்றும் 14 கோடி வருமானத்தை ஆதவ் மறைத்துள்ளார் என்றும், 1.69 கோடி ரொக்கமாக வைத்துள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதனால் தேர்தல் கண்காணிப்பாளர் விக்ரம் குமார் சிங் வரும் வரை காத்திருக்குமாறு கூறி ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுவை தேர்தல் அலுவலர்கள் நிறுத்தி வைத்தனர். பின்னர் நடந்த பரிசீலனைக்குப்பின், அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது.

* ஆர்.கே.நகர் த.வெ.க. வேட்பாளர் மரிய வில்சன், மயிலாப்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் த.வேலு, விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் உள்ளிட்டோரின் வேட்புமனுக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

* கல்வித்தகுதி புகாரை தொடர்ந்து திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டநிலையில், தற்போது அது ஏற்கப்பட்டுள்ளது.

* முறையாக பூர்த்தி செய்யாததால் சிதம்பரம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் பாரியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. பாரியின் கோரிக்கையை ஏற்று கடைசியாக மீண்டும் பரிசீலனை செய்த நிலையில் தேர்தல் அதிகாரி அந்த மனுவை நிராகரித்தார் . மாற்று வேட்பாளரான அவரது தந்தை நெடுஞ்செழியனின் மனு ஏற்கப்பட்டது.

* கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையன் கட்டியுள்ள புதிய வீட்டிற்கு வருமான வரி செலுத்தவில்லை என்றும், உரிமம் முடிந்த நோட்டரி வழக்கறிஞர் அளித்த சான்றிதழ்களை ஏற்கக் கூடாது எனவும் அதிமுகவினர் புகார் அளித்துள்ளநிலையில், மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.