தமிழக செய்திகள்

ஊட்டியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; வளர்ப்பு தந்தை கைது

ஒரு கட்டத்தில் வளர்ப்பு தந்தை தவறாக நடந்து கொள்வதாக தனது தாயிடம் சிறுமிகள் கூறினர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 11 மற்றும் 9 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிகளின் தந்தை பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர்களது தாய் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ஒருவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த 2 சிறுமிகளுக்கும் வளர்ப்பு தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் சிறுமிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கட்டத்தில் வளர்ப்பு தந்தை தவறாக நடந்து கொள்வதாக தனது தாயிடம் அவர்கள் கூறினர். ஆனால், இந்த பிரச்சினை பெரிதானால், 2-வது கணவரையும் பிரிய நேரிடும் என்று தாய் அச்சப்பட்டார்.

போக்சோவில் கைது

இதனால் அவர், வளர்ப்பு தந்தை உங்களிடம் விளையாடுகிறார். அதனால் இதை பற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று தெரிவித்தார். அதன் பின்னர் சிறுமிகள் செய்வதறியாது தவித்து வந்தனர். மேலும் வளர்ப்பு தந்தையின் பாலியல் தொல்லை தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளது. இதையடுத்து சிறுமிகள் தங்களது பெரியம்மாவிடம் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மற்ற உறவினர்களுடன் திரண்டு ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தை, இந்த சம்பவத்தை மூடி மறைக்க முயன்ற தாய் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் ஊட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.