தமிழக செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாத தமிழக அரசு: வழக்கறிஞர்கள் போராட்டம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தவெக அரசு தீபம் ஏற்றவில்லை.

மதுரை,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாத தமிழக அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ள மலையில் தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாளன்று தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த திமுக அரசு நிறைவேற்றவில்லை. மேலும், அந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தற்போதைய தவெக அரசும், கடந்த திமுக அரசின் நிலைப்பாடான தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் தீபம் ஏற்றாத தவெக அரசு

அந்த வகையில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கார்த்திகை தீபத்திருநாளான (நவம்பர் 24) நேற்று ஒருநாள் மட்டும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. ஆனால், கடந்த திமுக அரசு போலவே தற்போதைய தவெக அரசும் தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை என தவெக அரசை குற்றஞ்சாட்டி முருக பக்தர்கள் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் பாஜக உள்பட பல்வேறு தரப்புகளும் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

வழக்கறிஞர்கள் போராட்டம்

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாத தமிழக அரசை கண்டித்து மதுரை ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சுப்ரீம் கோர்ட்டு மற்றும் அரசியலமைப்பு சாசனத்தை தமிழக அரசு அவமதித்துவிட்டதாக கோஷங்களை எழுப்பி வழக்கறிஞர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT