சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
தமிழகம் முழுவதும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவதே விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த இயலாமல் சட்டவிரோதமாக தங்களின் நிலங்களின் எல்லைகளில் மின் வேலி அமைத்து அதில் அக்கிராம மனிதர்களோ, மின் வேலி அமைத்தவர் அல்லது அவரது குடும்பத்தினரோ சிக்கி உயிரிழப்பது தொடர் கதையாக உள்ளது. இதனால் சம்மந்தப்பட்ட விவசாயிகள் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் காட்டுப்பன்றிகளால் அதிகம் பாதிப்பு ஏற்படும் மாவட்டங்கள் திருவண்ணாமலை, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி,சேலம், மதுரை உள்ளிட்டவைகளாகும். பாதிப்பு ஏற்படுத்தும் வனவிலங்கு பட்டியலில் உள்ள காட்டுப்பன்றியை கண்டவுடன் கொல்வதற்கு மத்திய அரசுக்கு விண்ணப்பித்து (Wildlife protection Act 1972) சிறப்பு அனுமதியை தமிழக அரசு பெற்றுத்தரவேண்டும். கேரளாவில் விவசாயிகளின் கடுமையான போராட்டத்தால் மாநிலத்தின் சில மாவட்டங்களுக்கு காட்டுப்பன்றியை கொல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே உரிய காலத்தில் போதிய பருவ மழை இல்லாத்தாலும், புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் ஏற்படுகின்ற அழிவுகள், வேளாண் விளைப் பொருட்களுக்கு சரியான குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் தொடங்கி தஞ்சை டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சுமார் 70 விழுக்காடு மாவட்டங்களில் இந்த காட்டுப்பன்றிகளின் பெருக்கத்தால் பல இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர்கள் நாசமாகின்றன. கடந்த 2023–2024-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் யானைகள், காட்டுப்பன்றிகள் மற்றும் காட்டுயிர்களால் ஏற்படும் மனித – காட்டுயிர் மோதல் மற்றும் பயிர்ச்சேதங்களைத் தடுக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
காட்டுப்பன்றிகள் நடமாடும் பகுதிகள், 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் மண்டலம் 1-ல் காப்புக்காட்டிலிருந்து ஒரு கி.மீ. தொலைவு வரையுள்ள பகுதியாகக் குறிக்கப்பட்டு, அங்கு காட்டுப்பன்றிகளை சுட அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.காப்புக்காட்டிலிருந்து 1–3 கி.மீ. வரையுள்ள பகுதி, மண்டலம் '2' என்பதாக வரையறுக்கப்பட்டு, அங்கு வரும் காட்டுப்பன்றிகளைப் பிடித்து வனப்பகுதிக்குள் விடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 கி.மீ, துாரத்துக்கு அதிகமாகவுள்ள பகுதிகளை மண்டலம் '3' என்று குறிப்பிட்டு, அந்தப் பகுதிகளில் நடமாடும் காட்டுப்பன்றிகளை வனத்துறை சுட அனுமதிக்கலாம் என்றும், கொல்லப்படும் காட்டுப்பன்றிகளை இரசாயனப் பொருள் ஊற்றி புதைக்க வேண்டும் அல்லது முழுமையாக எரிக்க வேண்டும், இதற்கான கணக்கினை வனத்துறை பராமரிக்க வேண்டுமென்றும் அரசாணையில் விளக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழகத்தில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை குறித்து இதுவரை தனியாக எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. எனவே இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது.
சில ஆண்டுகளுக்கு முன்பு பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் காட்டுப்பன்றிகளை யார் வேண்டுமானாலும் கொல்ல மத்திய அரசு ஒரு வருட காலத்திற்கு அனுமதி அளித்ததைப்போலவும், கேரள மாநிலத்தில் கட்டுப்பாட்டுடன் சில மாவட்டங்களுக்கு காட்டுப்பன்றிகளை கொல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டிற்கும் அப்படியான அனுமதியை பெற மத்திய அரசிடம் தமிழக அரசு எடுத்துரைத்து அனுமதி பெறவேண்டும்.
காட்டுப்பன்றிகளால் ஏற்படும் இழப்பிற்கு அரசு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் அளிக்கிறது. ஆனால் இது உற்பத்தி செலவில் 25 விழுக்காடு மட்டுமாகும். காட்டுப்பன்றி தாக்கி இறந்தவருக்கு சுமார் ரூ.5 லட்சமும், கடுமையான காயம் அடைந்தவருக்கு ரூ.2 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது. காட்டுப்பன்றி உள்ளிட்ட காட்டுயிர்களால் ஆண்டுக்கு சுமார் 25 கோடி வரை இழப்பீடு அரசால் வழங்கப்படுகிறது. இதில் காட்டுப்பன்றி தாக்கியதால் பாதிக்கப்பட்டவர்களே பெரும்பான்மை என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே அரசு ‘Vermin’ என்கிற ஒரு விலங்கை பாதிப்புதரும் உயிரினம் என மத்திய அரசின் அனுமதியோடு மாநில அரசு அறிவித்தால் மட்டுமே கட்டுப்படுத்தி கொல்ல முடியும்.
கேரளாவைப் போல சுட்டுக்கொல்லும் அனுமதியை எளிதாக்க வேண்டுமென்று சில விவசாய அமைப்புகள் வலியுறுத்துகின்றன. அப்படி எப்போதுமே அனுமதியளிக்க முடியாது என்று தமிழக வனத்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் இதை மறுபரிசீலனை செய்து, விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த யார்வேண்டுமானாலும் கொல்ல அனுமதித்தால் மட்டும் தான் மிக அதிகமாக இனப்பொருக்கம் செய்யும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தி விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க முடியும்.
எனவே பாதிப்புகளை உண்டாக்கும் மாவட்டங்களையும், அதில் உள்ள பகுதிளையும் வனத்துறை உதவியோடு வேளாண் துறை ஆய்வு மேற்கொண்டு அப்பகுதிகளில் காட்டுப்பன்றிகளை கொல்ல அனுமதி அளித்து, விவசாயிகளின் வாழ்க்கையை பாதுகாக்கவேண்டும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.