திருச்சி,
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். இந்த கோவிலின் கிழக்கு நுழைவுவாயிலில் உள்ள தாமோதர கிருஷ்ணன் கோவில் கோபுரத்தின் ஒரு பகுதி (கொடுங்கை எனப்படும் வளைவுப் பகுதி) கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து அப்ப குதி மக்கள் மற்றும் பக்தர்கள் கிழக்குவாசல் கோபுரத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். அதன்படி பழமை மாறாமல் சிற்ப வல்லுனர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள் கொண்ட குழுவின் வழிகாட்டுதலின் படி புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றது.
இந்த கோபுர வாயில் 3 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது சீரமைப்பு பணிகள் முழு மையாக நிறைவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்த கோபுரத்தின் நுழைவுவாயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.