காரைக்கால்,
காரைக்கால் - பேரளம் இடையே உள்ள 23 கி.மீ. தொலைவுக்கு 1898-ம் ஆண்டு மீட்டர்கேஜ் ரெயில் பாதை அமைக்கப்பட்டது. 87 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த இந்த தண்டவாளத்தில் இயக்கப்பட்ட ரெயில்கள் மூலம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் சென்றுவந்தனர். மேலும், ஐஸ், மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்கள் எடுத்துச் செல்லவும் ரெயில்கள் பயன்படுத்தப்பட்டன. என்றாலும், போதிய வருவாய் இல்லை என்று கூறி 1987-ம் ஆண்டு ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
கடந்த 24 ஆண்டுகளாக இப்பகுதிக்கு இடையே ரெயில் போக்குவரத்து இல்லாமல் இருந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு நாகூர் காரைக்கால் இடையே 10.5 கி.மீ. தொலைவுக்கு புதிதாக அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு, ரெயில் பேக்குவரத்து தெடங்கியது. இந்த ரெயில் பாதையை பேரளம் வரை நீட்டிக்க வேண்டும் என்று திருநள்ளாறு வரும் பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, காரைக்கால் - பேரளம் இடையே 23 கி.மீ. தொலைவுக்கு அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், 8 பெட்டிகள் கொண்ட ரெயில் மூலம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, அதிவேக ரெயில் மூலம் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடைபெற்றது.
அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், ரெயில் சேவை எப்போது தொடங்கப்படும் என பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கிடையே, காரைக்கால் - பேரளம் இடையே மே 20-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது. அதன்படி, நாளை முதல் இரு நகரங்களுக்கு இடையே ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. 40 ஆண்டுகளுக்கு பின் பயணிகள் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.