தமிழக செய்திகள்

தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: தேர்தல் அறிவித்த பிறகு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கே.எஸ்.அழகிரி பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும், தேர்தல் அறிவித்த பிறகு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்ற பிறகு, அவருடைய தலைமையில் முதல் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது.

இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய் தத், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, செயல் தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் மற்றும் 72 மாவட்ட தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், தி.மு.க.வுடன் அமைந்துள்ள கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கேட்டு பெறுவது என்பது குறித்தும், அந்த தொகுதிகளில் யார் போட்டியிட்டால் வெற்றி பெற முடியும் என்பது குறித்தும் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக காரசாரமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் கடுமையாக உழைக்க வேண்டும். அதன் மூலம் ராகுல்காந்தியை பிரதமராக அமர வைக்க வேண்டும்.

* விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்குவதற்கு உத்தரவாதம் செய்ய வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை உடனடியாக வட்டியுடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்பது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தியை பிரதமராக அமரவைப்போம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தேர்தல் அறிவித்த பிறகு தான் தொடங்கும். எத்தனை தொகுதிகள்? என்பது எத்தனை கட்சிகள் வருகிறார்கள் என்பதை பொறுத்து அமையும்.

தி.மு.க. மதசார்பற்ற கருத்துகளோடு மதசார்பற்ற கூட்டணியில் காங்கிரசை ஆதரிப்பதால் கூட்டணி தொடருகிறது. முக்கிய நிர்வாகிகள், முன்னணி தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.

அனைத்து கட்சிகளும் தனித்து நின்றால், அ.தி.மு.க.வும் தனித்து நிற்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்னது பெரிய கருத்து இல்லை. அவர் சொல்வது போல, நாங்கள் தனித்து நிற்க வேண்டிய அவசியமும் இல்லை. எங்களுக்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களை மிரட்டமாட்டார்கள். ரைடு பண்ணமாட்டார்கள். எங்கள் மீது வழக்கு தொடரமாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த மாதிரியான நண்பர்கள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.