சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;-
வேளாண் பட்ஜெட் மீது விவசாயிகள் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. சுமார் இரண்டரை மணி நேர பட்ஜெட் அறிவிப்பில் முக்கிய திட்டம் ஏதுமில்லை. கரும்பு டன் ஒன்றுக்கு ஆதார விலை ரூ.4,500 என்றார்கள் அந்த வாக்குறுதி என்ன ஆனது? நெல் குவிண்டாலுக்கு ரூ.3.500 வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?
விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் இது. விவசாயிகளுக்கு இது நன்மை பயக்கக்கூடிய பட்ஜெட் இல்லை. முந்தைய ஆட்சியைப் போல வேளான் பட்ஜெட் என்ற பெயரில் நாடகம் அரங்கேற்றியுள்ளனர். தேர்தல் நேரத்தில் இனிக்க இனிக்க பேசிவிட்டு ஏமாற்றி உள்ளது தவெக அரசு. குடிமராமத்து என்ற அற்புதமான திட்டம் பற்றி பட்ஜெட்டில் ஏதுமில்லை.
தவெக வேளாண் பட்ஜெட்டின் சாதனை சும்மர் 2 மணி நேரம் வாசிக்கப்பட்டதுதான். காவிரி விவகாரத்தில் முதல்-அமைச்சர் வாய் திறந்து பேசுவதில்லை. தமிழ்நாட்டு முதல்-அமைச்சர் கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என அம்மாநில முதல்-மந்திரி சொல்கிறார். தமிழ்நாட்டுக்கு இது எவ்வளவு பெரிய தலைகுனிவு என முதல்-அமைச்சர் எண்ணிப்பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் தலைகுனிவு ஏற்படும் வகையில் முதல்-அமைச்சர் நடந்தது வருத்தமளிக்கிறது.
பொது பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் மார்க், வேளான் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் கொடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.