சென்னை,
வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் இன்று வேளாண்மை இயக்குநரகத்திற்கு வருகை தந்து வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அலுவலகங்களில் உள்ள அலுவலர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத், அமைச்சராக பதவியேற்ற மறுநாளே (22.05.2026) வேளாண்மை துறையின் செயல்பாடுகள் குறித்து நேரில் அறிந்து கொள்ள சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை இயக்குநரகத்திற்கு வருகை தந்து வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அலுவலகங்களில் உள்ள அலுவலர்களை சந்தித்து வேளாண்மை இயக்குநர் க.வீ. முரளிதரன் முன்னிலையில் அனைத்து தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களை அவர்களது இருக்கைகளுக்கே நேரில் சென்று அவர்களை சந்தித்து வேளாண்மை துறையை சிறப்புற வழிநடத்திட கலந்து ஆலோசித்தார்.
இதனைத் தொடர்ந்து, வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் மத்திய, மாநில அரசு திட்டங்கள் மற்றும் அதற்கு உண்டான நிதி ஒதுக்கீட்டு விவரங்கள், வேளாண்மை துறை சார்ந்த உட்கட்டமைப்பு விவரங்கள் மற்றும் மாநில அரசின் சிறப்பு திட்ட செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இவ்வரசானது, விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வருமானம் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை தொடர்ந்து அத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து எதிர்வரும் சட்டமன்ற நிதிநிலை கூட்டத் தொடரில் அறிவிக்க ஏதுவாக புதிய திட்டங்களை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுரைகளை வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.