புதுடெல்லி,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த ஆண்டு ஜீன் மாதம் 12-ந்தேதி புறப்பட்ட விமானம், பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில், அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதிக் கட்டிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானம் வெடித்து சிதறியதில் அதில் இருந்த 241 பேரும், மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 5 எம்.பி.பி.எஸ். மாணவர்களும், பொதுமக்கள் 14 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். விஸ்வாஸ் குமார் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
உயிரிழந்தவர்களின் உடல்களில் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகி உருக்குலைந்து இருந்ததால், டி.என்.ஏ. சோதனை மூலம் அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. விபத்தில் உயிரிழந்த இங்கிலாந்து, போர்ச்சுகல் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்கள் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விபத்து தொடர்பாக விமான விபத்து விசாரணைப் பணியகம்(AAIB) விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை நடைபெற்ற விசாரணை தொடர்பாக இடைக்கால அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆமதாபாத் விமான விபத்தின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஜூன் 12-ந்தேதி(நாளை) ஏர் இந்தியா விமான ஊழியர்கள் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்த உள்ளனர். இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
அதில், ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, நாளை பகல் 1.39 மணியில் இருந்து 1.41 மணி வரை, ஏர் இந்தியா ஊழியர்கள் தங்கள் பணியிடங்களில் இருந்தவாறு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம், விமான நிலைய கவுன்ட்டர்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் அத்தியாவசிய தரைவழி அல்லது விமான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், தேவைக்கேற்ப தங்கள் பணிகளை தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.