கோபி,
ஈரோடு மாவட்டம் கோபியில் த.வெ.க. சார்பில் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார். அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் விஜய் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். இதே இடத்தில் தேர்தலின்போது செங்கோட்டையன் நடமாட முடியுமா? என்று ஒருவர் கேட்டார். தற்போது அவர் சட்டமன்றத்தில் எனக்கு எதிர் திசையில் அமர்ந்துள்ளார். தமிழகத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை என்னால் கணிக்க முடியும். அதனால்தான் த.வெ.க.வில் முதல்-அமைச்சர் விஜய் முன்பு இணைந்தேன். அப்போது என்னை பலர் இவர் இந்த கட்சியில் சேர்ந்துவிட்டாரே என பேசினார்கள்.
11 முறை தேர்தலில் தோல்வி கண்டவருக்கு என்ன தெரியும்? விஜய் இருக்கும் வரை அவர்தான் தமிழகத்தில் நிரந்தர முதல்-அமைச்சர். அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் கொடுப்பதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம் என கூறியுள்ளார். அரசு கொடுக்கின்ற காரில் சென்றால்தான் பொதுமக்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அ.தி.மு.க.வில் 47 எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர். அதில் இன்னும் 10 பேர் எங்கள் த.வெ.க. கட்சியில் இணைய உள்ளனர். மீதி உள்ளவர்களும் இன்னும் 6 மாதங்களில் வந்து விடுவார்கள். அதன் பின்னர் அ.தி.மு.க. பூஜ்ஜியமாகிவிடும். இதை நான் சொல்லவில்லை. கட்சியில் இருப்பவர்கள் என்னிடம் கூறி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க. வெற்றி பெறாது.
இவ்வாறு அவர் கூறினார்.