தமிழக செய்திகள்

மின்வெட்டின்போது ‘செல்பி' எடுத்து அனுப்பினால் ஜெயிலர்-2 படத்துக்கு டிக்கெட் - அதிமுக கவுன்சிலரின் நூதன போராட்டம்

இதையடுத்து அதிமுக கவுன்சிலருக்கு 340 பேர் மின்வெட்டின்போது செல்பி எடுத்து அனுப்பி உள்ளனர்.

திருப்பூர்,

தி.மு.க., அ.தி.மு.க. மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை கூறி த.வெ.க. ஆட்சிக்கு வந்த நிலையில், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகள் தற்போது இந்த ஆட்சியிலும் இருப்ப தாக பொதுமக்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மின்வெட்டின்போது ‘செல்பி'

இந்த நிலையில் மின்வெட்டு தொடர்பாக ஒரு நூதன விழிப்புணர்வை திருப்பூர் 9-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் திவ்யபாரதி முன்னெடுத்து செய்துள் ளார். அதன்படி அந்த வார்டு பொதுமக்களுக்கு வாட்ஸ்-அப் குழு மூலமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், வீடுகளில் மின்வெட்டு ஏற்படும்போது பகலாக இருந்தால் மின்மீட்டர் அருகில் இருந்தும், இரவாக இருந்தால் மெழுகுவர்த்தி ஏந்தியும் செல்போனில் செல்பி எடுத்து அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால் முதலில் அனுப்பும் 55 பேரின் குடும்பத்தில் 2 பேருக்கு ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு அழைத்துச் செல்வோம் என்றும் கூறி உள்ளார்.

படத்துக்கு டிக்கெட்

இது அ.தி.மு.க. 55-ம் ஆண்டு தொடக்கவிழாவின் அடையாளமாகவும், த.வெ.க. ஆட்சியின் மின்வெட்டு அவலத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் அமையும் என்றும் கூறி உள்ளார். இதையடுத்து 340 பேர் மின்வெட்டின்போது செல்பி எடுத்து அனுப்பி உள்ளனர். அதில் முதலில் அனுப்பிய 55 பேரை தேர்வு செய்த கவுன்சிலர் திவ்யபாரதி பாலாஜி அந்த குடும்பத்தில் 2 பேர் என மொத்தம் 110 பேரையும், அ.தி.மு.க. நிர்வாகிகள் 15 பேர் என மொத்தம் 125 பேரை அங்கேரிபாளையத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு அவருடைய சொந்த செலவில் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு அழைத்து சென்றார்.

மேலும் திரைப்பட இடைவேளையின் போது மின்வெட்டு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் தியேட்டரின் நடுவே நின்று மின்சாரம் இல்லை என்றால், தொழில் இல்லை. மின்சாரம் இல்லை என்றால் படிப்பு இல்லை. பவர்புல் ஜெயிலர்-2, பவர்புல் தமிழ்நாடு என்ற ஆங்கில வாசகங்கள் அடங்கிய பேப்பர்களை பொதுமக்கள் கையில் பிடித்தவாறு நின்றனர். இது மின்வெட்டு குறித்து நூதன போராட்டமாக இருந்தாலும், த.வெ.க. அரசின் குறையை சுட்டிக்காட்டுவதாகவே அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT