தமிழக செய்திகள்

டிசம்பர் முதல் வாரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம்?

மாவட்ட வாரியாக பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை தயார் செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியாக கூறப்படுகிறது.

சென்னை,

டிசம்பர் முதல் வாரத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்த அதிமுக திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக 3வது இடத்திற்குத் தள்ளப் பட்டு கடும் பின்னடைவைச் சந்தித்தது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிற்பகல் 3.30 மணி அளவில் நடைப்பெற்றது. இக்கூட்டம் அதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைப்பு ரீதியாக உள்ள 84 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எஸ்.பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை. கட்சி வளர்ச்சி பணி, மாவட்ட செயலாளர்கள் செயல்பாடு, 2 தொகுதி இடைத்தேர்தல் தோல்வி, எதிர்வரும் 5 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதால் அதற்கு பணியாற்ற மாவட்ட செயலாளர்கள் தயாராக இருக்க வேண்டும். வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் அதிமுக கடும் போட்டியை கொடுக்கும். எப்போது இடைத்தேர்தல் நடந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்.

புதிதாக மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தங்கள் பகுதிகளில் கட்சியை பலப்படுத்த வேண்டும்.

18 வயது பூர்த்தி அடைந்தவர்களை உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தவெக சென்றவர்களில் சிலர் மீண்டும் தாய் கழகத்திற்கு வருகிறோம். அதே பதவி கொடுங்கள் என கேட்கிறார்கள் என இபிஎஸ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அதிமுகவில் சேர்த்து கொள்கிறோம் ஆனால் அதே பதவி வழங்க முடியாது. அதை பற்றி பிறகு பார்க்கலாம் என இபிஎஸ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து டிசம்பர் முதல் வாரத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும் மாவட்ட வாரியாக பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை தயார் செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT