சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் சட்டசபை கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என்று வேலுமணி ஒரு கருத்தை கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வை விட்டு வெளியேறி தி.மு.க.வில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் தினகரன் அ.ம.மு.க. என்ற ஒரு கட்சியைத் தொடங்கி, அதன் பொதுச்செயலாளராக இருக்கிறார். சசிகலா தனி கட்சியைத் தொடங்கியுள்ளார். இப்படிபட்ட சூழலில் அவர்களை அ.தி.மு.க.வில் எவ்வாறு இணைப்பது? காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வேலுமணி இது போன்ற கருத்துக்களை கூறி வருகிறார்.
வேலுமணி தலைமையிலான நிர்வாகிகள் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம் என்கிறார்கள். அப்படி என்றால் ஏன் அவர்கள் த.வெ.க.வை ஆதரிக்க வேண்டும்?சட்டசபையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் நிலைப்பாடுக்கு எதிராக ஏன் த.வெ.க. அரசை ஆதரித்து ஓட்டு போட வேண்டும்? 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் கருத்தின் அடிப்படையில்தான் பா.ஜனதா கூட்டணி வேண்டாம் என்று நிலைப்பாடு எடுக்கப்பட்டது.
பா.ஜனதாவோடு கூட்டணி வேண்டாம் என்று அப்போது முதலில் குரல் கொடுத்தவர் வேலுமணிதான். அ.தி.மு.க. சட்டவிதிகளின்படி பொதுச்செயலாளர் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. அப்படி இருக்கும் போது அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தவே தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.