கரூர்,
கரூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற முயன்ற மாநகராட்சி அதிகாரிகளுடன், அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று கரூர் மாநகர பகுதிகளில் அக்கட்சியினர் சார்பில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து, அந்த பேனர்களை அகற்றுவதற்காக மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அப்போது, பேனர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர், அதிகாரிகள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த சில பேனர்களை அ.தி.மு.க.வினரே அகற்றினர்.