சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. எடப்பாடி அணி மற்றும் சண்முகம் அணி என இரு பிரிவாக எம்.எல்.ஏ.க்கள் இருந்து வருகின்றனர். இதில் சண்முகம் தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்தியபாமா, ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அ.தி. மு.க. எம்.எல்.ஏ. ஜெயக்குமார், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் ஆகியோர் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரனை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்தனர். பதவியை ராஜினாமா செய்த 3 பேரும் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
இந்த நிலையில், அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, தனது எம்.எல்.ஏ. பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். இதற்காக அவர் சென்னை தலைமை செயலகத்துக்கு வருகை தந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து டைப் செய்யப்பட்ட ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அந்த கடிதத்தை ஏற்க மறுத்த சபாநாயகர், கடிதத்தை கைப்பட எழுதி தருமாறு இசக்கி சுப்பையாவிடம் அறிவுறுத்தினார். இதன் பேரில் இசக்கி சுப்பையா, தனது கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுதி சபாநாயகரிடம் வழங்கினார். அந்த கடிதத்தை சபாநாயகர் பெற்றுக்கொண்டார். இதன் மூலம் பதவியை ராஜினாமா செய்துள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தற்போது 4 ஆக அதிகரித்துள்ளது. ராஜினாமா செய்துள்ள இசக்கி சுப்பையா, தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த இசக்கி சுப்பையா;
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்டவர் இசக்கி சுப்பையா. இதில் காங்கிரஸ் மற்றும் தவெக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி 10,245 வாக்குகள் வித்தியாசத்தி வெற்றி பெற்றார். இவர் ஏற்கெனவே 2011 மற்றும் 2021 சட்டசபை தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 2011ல் அப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா இவருக்கு அமைச்சர் பதவியை வழங்கி இருந்தார். இவர் அம்பாசமுத்திரம் தொகுதி மக்களிடையே நல்ல செல்வாக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.