கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாக தவெகவில் சேர்ந்திருக்கிறார்கள்... இதில் ஏன் இவ்வளவு கதறல்? - மாணிக்கம் தாகூர்

குதிரை வேகத்தில் நடக்கும் ‘குதிரை பேரம்' என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் இன்று தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். இதையடுத்து குதிரை வேகத்தில் ‘குதிரை பேரம்' நடக்கிறது என்று திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் குற்றம் சாட்டி பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் பதிவுக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், "அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் இடங்களை ராஜினாமா செய்து, வெளிப்படையாக தவெகவில் சேர்ந்திருக்கிறார்கள். இதில் ஏன் இவ்வளவு கதறல்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மக்களின் தீர்ப்பை ஏற்க முடியாமல் இன்று நாடகம் ஆடுவது யார் என்பதை தமிழ்நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது. 107 எம்.எல்.ஏக்களுடன் விஜய்க்கே மக்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்தார்கள். உங்களிடம் இருந்தது 59 எம்.எல்.ஏக்கள் மட்டுமே. மக்கள் உங்களை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள்.

ஆனால் என்ன நடந்தது? உதயநிதியும், பழனிசாமியும், பாஜக மூத்த தலைவரின் “connecting call” அரசியலில் ஈடுபட்டு, மக்கள் தீர்ப்பை டெல்லி சக்தியால் மாற்ற முயன்றார்கள். அந்த “underground operation” எங்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. அதனால்தான் காங்கிரஸ் உறுதியாக முடிவு எடுத்தது. தமிழ்நாட்டில் பின்வாசல் வழியாக பாஜக ஆட்சியை அனுமதிக்க மாட்டோம் என்று.

அதனால்தான் நாங்கள் தவெக அரசை ஆதரித்தோம். இடதுசாரிகள் ஆதரவு அளித்தனர். ஐயுஎம்எல், விசிக அரசில் இணைந்தனர். உங்கள் மகனின் திட்டம் மீண்டும் தோல்வியடைந்தது.

இப்போது மூன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் இடங்களை ராஜினாமா செய்து, வெளிப்படையாக தவெகவில் சேர்ந்திருக்கிறார்கள். இது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு. இதில் ஏன் இவ்வளவு கதறல்?

மக்களின் தீர்ப்பை மதிக்காமல் டெல்லி அதிகாரத்துடன் சேர்ந்து யார் விளையாடினார்கள், மக்களின் ஆட்சியை காப்பாற்ற யார் நின்றார்கள் என்பதை தமிழ்நாடு அறியும். மூன்று தொகுதி மக்களும் விரைவில் தீர்ப்பு சொல்லட்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.