தமிழக செய்திகள்

இன்று நடைபெறவிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து

தனித்து போட்டியிட்டதால் த.வெ.க.வுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை.

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் த.வெ.க. 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும், தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் த.வெ.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார்.

அதன்படி, விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று, கவர்னர் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும். 108 என்ற எண்ணிக்கையுடன் அதைச் சாத்தியப்படுத்துவது கடினம்.

தனித்து போட்டியிட்டதால் த.வெ.க.வுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை. எனவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவளித்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும். த.வெ.க. வெளிப்படையாக எந்த கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை என்றாலும், பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு முதல் முறையாக இன்று காலை கூட இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தவெகவை ஆதரிப்பது தொடர்பாக கட்சியில் கருத்து வேறுபாடு நிலவுவதால் கூட்டம் ரத்து என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலால் எடப்பாடி பழனிசாமி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.