தமிழக செய்திகள்

சென்னைக்கு திரும்பும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

2 நாட்கள் காத்திருங்கள், நல்லது நடக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதன்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றில் இடம்பிடித்து உள்ளது. இந்த வெற்றி உற்சாகத்தில் விஜய், கவர்னர் அர்லேகரை சந்தித்து த.வெ.க.வை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார்.

ஆனால் கவர்னர் அர்லேகர், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 118 எம்.எல். ஏ.க்கள் பெயர் பட்டியலை வழங்கினால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதையடுத்து, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கேட்டு விஜய் கடிதம் எழுதினார். மேலும் த.வெ.க. நிர்வாகிகளை நேரில் அனுப்பியும் வேண்டுகோள் விடுத்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று 5 எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி மட்டும் தி.மு.க.வுக்கு 'கல்தா' கொடுத்து விட்டு த.வெ.க.வுக்கு கைகொடுத்தது. மற்ற கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன.

இதற்கிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. பக்கம் சாயாமல் இருக்க அவர்களை புதுச்சேரி அழைத்து சென்று சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே நேற்று இரவு 7 மணிக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து கார் மூலம் புதுச்சேரியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு சென்றார்.

அப்போது விடுதிக்கு வெளியே திரண்டிருந்த அ.தி.மு.க.வினர் நாளைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்க... வாழ்க... என்று கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அரசியலில் எந்த முடிவுகள் எடுப்பதற்கும் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்குவதாக எம்.எல்.ஏ.க்கள் ஒட்டு மொத்தமாக ஆதரவை தெரிவித்ததாக தெரிகிறது.

கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.க்களிடம், உங்களை த.வெ.க.வினர் தொடர்பு கொள்ள முயற்சி செய்வார்கள், நீங்கள் அவர்களிடம் எதுவும் பேச வேண்டாம். 2 நாட்கள் காத்திருங்கள், நல்லது நடக்கும் என்று கூறினார். மேலும் அ.தி.மு.க. சட்டமன்றக்குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. கூட்டத்தை முடித்து விட்டு எடப்பாடி பழனிசாமி காரில் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார்.

இந்த நிலையில், புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களை உடனடியாக சென்னைக்கு திரும்பி வர அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏக்களிடம் நேற்று கடிதம் பெறப்பட்ட நிலையில் இன்று அவர்கள் அங்கிருந்து சென்னைக்கு புறப்படுகின்றனர்; ஒருசிலர் மாலை புறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைவரும் சென்னை வந்தது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.