சென்னை,
தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும், திருச்சி கிழக்கு தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் பதவியை விஜய் ராஜினாமா செய்துள்ளார். அதற்காக அவர் கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதால், 234 தொகுதிகளில் ஒரு தொகுதி காலியாகிவிட்டது.
இந்த நிலையில், தமிழகத்தின் 17-வது சட்டசபை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணத்தை தற்காலிக சபாநாயகர் கருப்பையா செய்து வைப்பார். உறுப்பினர்கள் அனைவரும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள்.
இந்நிலையில், அதிமுகவில் தலைமைப் பதவிக்கு நிலவும் மோதலால் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 5 பேருடன் எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வந்தார். எடப்பாடி வருகை தந்த பிறகு எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒரு குழுவினராக சட்டசபைக்கு வருகை தந்தனர்.
13-ந் தேதிக்குள், அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி பெரும்பான்மையை நிரூ பிப்பதற்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக சட்டசபை எப்போது கூடும் என்பது இன்று தெரியவரும்.