தமிழக செய்திகள்

அ.தி.மு.க. பிரிட்ஜ் கொடுப்பதாக வாக்குறுதி: எல்.இ.டி. டிவி அறிவிப்பை வெளியிட தி.மு.க. திட்டம்!

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தொடர்ந்து, தி.மு.க.வும் ஏப்ரல் 2-ந் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளது.

சென்னை,

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாட்டில் 1952-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை 16 சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. தற்போது, நடைபெற இருப்பது 17-வது சட்டசபை தேர்தல் ஆகும்.

ஆரம்ப காலத்தில், ஆட்சியில் இருந்தவர்கள், கடந்த 5 ஆண்டு காலத்தில் கொண்டுவந்த புதிய திட்டங்களை சாதனையாக கூறி வாக்கு கேட்பார்கள். எதிர்க்கட்சியாக இருப்பவர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதுவெல்லாம் செய்வோம் என்று வாக்குறுதி அளிப்பார்கள்.

கவர்ச்சிகரமான அறிவிப்புகள்

ஆனால், இந்த தேர்தல் கால நடைமுறைகள் காலப்போக்கில் மாறியது. ஆட்சியில் இருந்தவர்கள், செய்த திட்டங்களை சொல்லி வாக்கு கேட்பதை குறைத்துக்கொண்டு, கவர்ச்சிகரமான பொருட்களை இலவசமாக கொடுப்பதாக சொல்லி வாக்குகள் கேட்கத் தொடங்கினார்கள்.

அப்படித்தான், 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவசமாக வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வழங்குவதாக அறிவித்து, தேர்தலில் வெற்றி பெற்றது.

கடன் சுமை அதிகரிப்பு

அடுத்து வந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க., நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி தருவதாக வாக்குறுதி அளித்து, தேர்தலிலும் வெற்றி வாகை சூடியது.

இப்படி, இலவசங்கள் கொடுக்கத் தொடங்கிய பிறகுதான், தமிழ்நாட்டில் கடன் சுமையும் ஒருபக்கம் வேகமாக அதிகரித்தது. ஆனால், இதைப்பற்றி கவலைப்படாத ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும், தொடர்ந்து இலவச பொருட்களை தவிர்த்து, வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கும் நடைமுறையை புதிதாக புகுத்தியது.

ஏப்ரல் 2-ந் தேதி தி.மு.க. தேர்தல் அறிக்கை

கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற முக்கிய காரணம், ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை அறிவித்ததுதான்.

நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில், வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதை அதிகரிப்பதுடன், இலவச பொருட்களையும் வழங்குவதாக எதிர்கட்சியான அ.தி.மு.க. அறிவித்துள்ளது. வீட்டுக்கு வீடு பிரிட்ஜ் வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளது.

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தொடர்ந்து, ஆளுங்கட்சியான தி.மு.க.வும் ஏப்ரல் 2-ந் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளது.

எல்.இ.டி. டிவி வாக்குறுதி வெளியாக வாய்ப்பு

தி.மு.க. தேர்தல் அறிக்கையில், திருச்சியை தலைநகரமாக அறிவிக்கும் வாக்குறுதி வெளியாகும் என்று தெரிகிறது. மேலும், வீட்டுக்கு வீடு எல்.இ.டி. டிவி வழங்கும் அறிவிப்பும் முக்கியமாக இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையை தொடர்ந்து, ஏப்ரல் 3-ந் தேதி திருவாரூரில் இருந்து தனது தேர்தல் பிரச்சார பயணத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்க இருக்கிறார்.