சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களுடைய ஆட்சிக் காலங்களின்போதும்; அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற எனது தலைமையிலான கழக ஆட்சியின்போதும், தொழிலாளர்கள் நலனை கருத்தில்கொண்டு, அவர்களுடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, தொழிலாளர்கள் பாராட்டும் நல்லரசுகளாக இருந்து வந்ததை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சியில் அமர்ந்த திமுக அரசு, மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமலும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றித் தராமலும், குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
அந்த வகையில் நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்த பணப் பலன்கள், விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தராமல் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசைக் கண்டித்தும்; தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் 13.3.2026 – வெள்ளிக் கிழமை பிற்பகல் 3 மணியளவில், சென்னை, பல்லவன் இல்லம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான னு. ஜெயக்குமார் தலைமையிலும், கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன், தலைவர் தாடி ம. ராசு, பொருளாளர் எம். அப்துல் அமீது ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் மாநில நிர்வாகிகள், போக்குவரத்துப் பிரிவு நிர்வாகிகள், தமிழ் நாடு முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஆதரவாக, திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளப் பெருமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.