சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
மதுரை மாநகராட்சி நிர்வாகப் பதவிகளில் இருந்த ஆளும் திமுக-வினரால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் ஊழல் முறைகேடுகளைத் தொடர்ந்து, திமுகவைச் சேர்ந்த மாநகராட்சி மேயர், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் நிலைக் குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், திமுக அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், குற்றம் புரிந்தவர்களுக்கு ஆதரவாக இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல் முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அதிமுக மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் 12.3.2026 (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் 'முனிச் சாலை, தினமணி தியேட்டர் அருகில்', முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, எம்.எல்.ஏ. தலைமையிலும், அதிமுக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான வி.வி ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ. முன்னிலையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மாமன்ற இன்னாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத, திமுக ஸ்டாலின் மாடல் அரசையும், மதுரை மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் நிர்வாகிகளும். உறுப்பினர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு; வியாபாரிகள் பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.