சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த காலக்கட்டத்தில் மிகப் பெரிய அளவில் தமிழ் நாட்டை பின்னோக்கி இழுக்கின்ற வேலையை இந்த அரசாங்கம் செய்திருக்கிறது. மூன்று மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டவர்கள், 6 மாத காலம் நிறைவு பெற்றிருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டு மக்களின் மிகப் பெரிய துயரமாக மாறி நிற்கிறார்கள்.
'எங்கும் போதை, எதிலும் போதை' என்கிற அளவிற்கு மாநிலமே தள்ளாடுகின்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்ற போதும், முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இதுகுறித்த புரிதல்கூட இல்லாமல் பொம்மை போல் அமர்ந்திருக்கிறார் என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு விஷயம்.
சட்டம்-ஒழுங்கு ஒரு பக்கம் சமூக விரோதிகளால் சீரழிக்கப்படுகிறது என்றால், இன்னொரு பக்கம் வேலியே பயிரை மேய்வது போல, த.வெ.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள், தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்த நிலையில், த.வெ.க. ரீல்ஸ் மாடல் ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழிக்கின்ற வகையிலும், அவர்களுடைய மக்கள் விரோத; ஜனநாயக விரோத ஆட்சியை மக்கள் மன்றத்திலே அம்பலப்படுத்துகின்ற வகையிலும், அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 85 மாவட்டங்களின் சார்பில், வருகிற 2-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்கள், சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள் தலைமையிலும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த, கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்,
உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் மகளிர் மற்றும் பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.