தமிழக செய்திகள்

சிங்காநல்லூர் தொகுதியை அண்ணாமலைக்கு வழங்க அ.தி.மு.க. மறுப்பு: ஆதரவாளர்கள் அதிருப்தி

சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட முடிவு செய்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை, 2011 முதல் 2019-ம் ஆண்டு வரை கர்நாடக மாநில காவல் துறையில் பணியாற்றினார். பின்னர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் நுழைந்தார். 2020-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த அண்ணாமலைக்கு, 2021-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி வழங்கப்பட்டது. அவருடைய அதிரடி அரசியல் பேச்சு பலரை கவர்ந்தது. எதிர்க்கட்சிகளை அச்சமடைய செய்தது என்றும் கூறலாம். அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உடைந்ததுஇந்த நிலையில், தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தலில் இந்தக் கூட்டணி தோல்வி அடைந்த நிலையில், அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர், தோல்விக்கு பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததே காரணம் என்று கூறினார்கள். அதற்கு பதிலடியாக அண்ணாமலையும் எதிர் கருத்து தெரிவித்ததால், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உடைந்து போனது.

இந்த நிலையில், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் மலர்ந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு கூட்டணி பேச்சு வார்த்தையை பா.ஜ.க. தேசிய தலைமை தொடங்கியபோதே, "மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றுங்கள்" என்று அ.தி.மு.க. தரப்பு கோரிக்கை வைத்தது. அண்ணாமலை மாற்றப்பட்ட பிறகே, பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க.வும் இணைந்தது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் போட்டியிட முடிவு செய்துள்ளார். ஏற்கனவே, கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியிலும், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியிலும் அண்ணாமலை போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதனால், இந்தமுறை அவர் தொகுதியை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்திவந்தார். தற்போது, கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து, அ.தி.மு.க. தலைமையிடம் தெரிவிக்கப்பட்டபோது, "கோவை மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை. ஏற்கனவே, கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. வசம் (வானதி சீனிவாசன்) உள்ளது. அங்கு கூடுதலாக ஒரு தொகுதி எல்லாம் தர முடியாது. வேண்டுமென்றால் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் அண்ணாமலை போட்டியிடட்டும்" என்று கூறிவிட்டதாம். இதனால், அண்ணாமலை கடும் அதிருப்தியில் உள்ளாராம். ஏற்கனவே, தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியும் அ.தி.மு.க.வால் தான் போனது என அண்ணாமலை ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. தேர்தலிலும் அ.தி.மு.க.விடம் அண்ணாமலைக்காக ஒரு இடம் பா.ஜ.க. தரப்பில் கேட்கப்பட்டதாம். ஆனால், பா.ம.க. தலைவர் அன்புமணிக்கு அந்த இடத்தை அ.தி.மு.க. ஒதுக்கிவிட்டதாம். இப்படி, அண்ணாமலைக்கு என்று அ.தி.மு.க.விடம் சென்றாலே, அவர்கள் கொடுக்க மறுக்கிறார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது, சிங்காநல்லூர் தொகுதியும் அவருக்கு வழங்க மறுப்பது, அவர்களது வேதனையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.