தமிழக செய்திகள்

துணை சபாநாயகர் ரவிசங்கரை கண்டித்து 18-ந் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்! - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

த.வெ.க-வின் துணை சபாநாயகர் தவறிழைத்து மாட்டிக்கொண்ட பிறகும், விஜய் இதுகுறித்து வாயே திறக்காமல் இன்னும் மவுனம் சாதித்துக் கொண்டிருக்கிறார்.

சென்னை,

நீண்ட மரபும், மாண்பும் பொருந்தி இருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கரை சந்தித்து குறைகளை தெரிவிப்பதற்காகச் சென்ற சமூக செயல்பாட்டாளர் கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும், அதிகார மமதையில் தவறிழைத்தவர் மீது. கடும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 18-ந் தேதி (புதன் கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எட்ப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஜனநாயகப் படுகொலை

தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியும் போலியாக தன்னுடைய முகத்தைக் காட்டியும் மக்களை ஏமாற்றி விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்தது. அரசு அமைத்தபோதே சட்டமன்ற உறுப்பினர்களைத் திருடுவது ஜனநாயகக் கோட்பாடுகளை காலில் போட்டு மிதிப்பது என்று சகட்டுமேனிக்கு ஜனநாயகப் படுகொலைகளை அரங்கேற்றத் தொடங்கியது த.வெ.க.

போதைப் பொருள் விற்பனையில் சிக்குகின்ற த.வெ.க. நிர்வாகிகள் தொடங்கி. அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் ஆங்காங்கே நிகழ்த்தப்படும் அராஜகங்கள் வரை, த.வெ.க. கட்சியினர் கையில் ஆட்சி அதிகாரம் கிடைத்தவுடன் அனைத்து விதமான சட்ட மீறல்களையும் தைரியத்தோடு செய்யத் தொடங்கிவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

கொலை வெறித்தாக்குதல்

அதேபோல், மிக நீண்ட மரபும், மாண்பும் பொருத்தி இருக்கின்ற தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையின் துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கரை சந்தித்து குறைகளை தெரிவிப்பதற்காகச் சென்ற சமூக செயல்பாட்டாளர் கார்த்திக் குமார் என்பவர் மிகக் கொடூரமான கொலை வெறித்தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதும், அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அவரை வசைபாடி இருப்பதும், தமிழ்நாட்டில் இருக்கின்ற சாதாரண குடிமகன் ஒவ்வொருவரும் பெரும் அச்சமடைகின்ற நிலையை உருவாக்கி இருக்கிறது. ஆதாரங்கள் வெளியே போகாது என்று நினைத்து தன்னுடைய சுயரூபத்தை முழுமையாக துணை சபாநாயகர் ரவிசங்கர் வெளிக்காட்டி இருக்கின்ற கோரக் காட்சிகளை இன்றைக்கு உலகமே பார்க்கிறது.

இந்த கொலைவெறித் தாக்குதலை கார்த்திக் குமார் மீது நிகழ்த்திய பிறகு ஆதாரங்கள் வெளியானதைக் கண்டு அச்சப்பட்ட ரவிசங்கர், அந்தச் சமூக செயல்பாட்டாளரை மீண்டும் மிரட்டி தன்னுடைய அதிகாரத் திமிரை அவரிடம் காட்டி, ஆளும் விஜய் அரசினுடைய கைப்பாவையாக மாறிப் போயிருக்கின்ற சில காவல் துறை அதிகாரிகளில், யாரோ ஒருவரை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட நபராலேயே, அங்கு நடந்த சம்பவமே பொய் என்று சமூக வலைதளங்களில் வெளியிட வைத்திருப்பது, சினிமாவையே மிஞ்சுகின்ற ரவுடியிசத்தை எவ்வளவு சாதாரணமாக த.வெ.க-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

முதல்-அமைச்சர் விஜய் மவுனம்

இந்தக் கொடூரர்களின் பிடியில் இருந்து தப்பி வந்த கார்த்திக் குமார், நடந்த உண்மைகளை முழு வீடியோவாக வெளியிட தங்களை அப்பாவிகள் போல் வாட்டிக்கொள்ளுகின்ற இவர்களின் முகத்திரை, இன்றைக்கு மக்கள் மன்றத்தில் கிழிந்து தொங்குகிறது. இவ்வளவு அப்பட்டமாக த.வெ.க-வின் துணை சபாநாயகர் தவறிழைத்து மாட்டிக்கொண்ட பிறகும், முதல்-அமைச்சர் விஜய் இதுகுறித்து வாயே திறக்காமல் இன்னும் மவுனம் சாதித்துக் கொண்டிருக்கிறார்.

உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேண்டிய துணை சபாநாயகர் ரவிசங்கரும், அவருக்குத் துணைபோனவர்களும், இன்றைக்கும் அதிகாரத் திமிரோடு வலம் வந்துகொண்டிருப்பது, மக்கள் மத்தியில் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை குலைக்கின்ற செயலாகும்.

வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்கள் மீது அதிகாரத் திமிரில் அத்து மீறுவதும்: நாடகங்களை அரங்கேற்றி மக்களை ஏமாற்றுவதும்; அப்பட்டமாக மாட்டிக்கொண்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரத் திமிரோடு செயல்படுவதும் கண்டனத்திற்கு உரியதாகும்.

கண்டன ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், நீண்ட மரபும், மாண்பும் பொருந்தி இருக்கின்ற தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையின் துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கரை சந்தித்து குறைகளை தெரிவிப்பதற்காகச் சென்ற சமூக செயல்பாட்டாளர் கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும்; அதிகார மமதையில் தவறிழைத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில், 18.11.2026 - புதன் கிழமை காலை 10 மணியளவில், 'துறையூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில்' மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கண்டன ஆர்ப்பாட்டம், கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி தலைமையிலும்; திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் N. யோகநாதன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக அமைப்புச் செயலாளர் T. ரத்தினவேல், Ex. M.P., கழக அமைப்புச் செயலாளரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், அரசு தலைமை முன்னாள் கொறடாவுமான R. மனோகரன், திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் C. கார்த்திகேயன், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் T.N. சிவக்குமார், கழக மகளிர் அணி இணைச் செயலாளர் லால்குடி தொகுதி டாக்டர் லீமா ரோஸ் மார்டின், M.L.A., ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சிப் பதவிகளில் பணியாற்றி வரும் மற்றும் பணியாற்றிய பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மக்களின் பாதுகாப்பை முன்வைத்தும், நிர்வாகத் திறனற்ற த.வெ.க. அரசைக் கண்டித்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT