தமிழக செய்திகள்

ஒன்றிணைந்தது அதிமுக... தவெக அரசுக்கு தெரிவித்த ஆதரவு வாபஸ்.!

அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் கடிதம் வழங்கினர்.

சென்னை,

இரு பிரிவான அதிமுக

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் என 2 ஆக பிரிந்தது. இதில் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு அளித்தனர். தொடர்ந்து இரு தரப்பினரிடையே பிரச்சினை அதிகரித்து வந்தது.

அதிமுக கொறடாவாக தங்களை நியமிக்கக்கோரி இரு தரப்பினரும் சபாநாயகரிடம் மனு அளித்தனர். இதற்கிடையே எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். மேலும் 6 பேர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர்.

சமரச பேச்சுவார்த்தை

நிலமை மோசமாக செல்வதை உணர்ந்த இரு தரப்பினரும், தற்போது ஒன்றாக செயல்பட முடிவு செய்தனர். இதையடுத்து, அதிமுகவை ஒன்றிணைக்கும் நோக்கில் இரு தரப்பினரும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து சி.வி.சண்முகம் இல்லத்தில் இருந்து எஸ்.பி. வேலுமணி தலைமையில் 14 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இன்று புறப்பட்டனர். பறித்த கட்சி பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதாக தகவல் வெளியானது.

தவெக ஆதரவு வாபஸ்

எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கினர். எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்புக்குப் பிறகு எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து சட்டப்பேரவை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததையும் வாபஸ் பெறுவதாக கடிதம் அளித்தனர்.

ஒன்றிணைந்த அதிமுக

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் இடையேயான சமரச முயற்சி கைகூடியுள்ள நிலையில் இரு தரப்பினரும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அலுவலகத்துக்கு ஒன்றாக சென்றனர். அதேபோல, கொறடா விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம் கொடுத்த கடிதத்தையும் திரும்ப பெற்றனர். ஒரே அணியாக இருப்பதாக சபாநாயகரிடம் தெரிவித்தனர்.

மேலும், எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் கடிதம் வழங்கினர். அதேபோல, அதிமுக கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமிக்கக் கோரியும் சபாநாயகரிடம் மனு அளித்தனர். தேர்தலுக்கு பிறகு இரு பிரிவாக செயல்பட்டு வந்த அதிமுக, தற்போது ஒன்றிணைந்துள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.